×

சீர்காழியில் இயற்கை விவசாயத்திற்கு அடிக்கல் நாட்டியவர்!

 

நன்றி குங்குமம் தோழி

நம் முன்னோர்கள் விவசாய மண்ணை தெய்வமாக தொழுதார்கள். வரப்பின் மீது செருப்பு அணிந்து கூட நடக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட மண்ணும் விளை நிலமும் கால சூழ்நிலையால், செயற்கை உரங்களால் மிகவும் மாசுபட்டு போனது. விதைகளை காப்பாற்ற, விளைநிலங்களை மீட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த இயற்கை விவசாயத்தை பலர் கையில் எடுக்க ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர்தான் சுபாஷினி ஸ்ரீதர். சீர்காழி பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வளநாடு நிலையான விவசாய உற்பத்தி நிறுவனம் என்ற பெயரில் இவர் இயற்கை விவசாயம் மேற்கொள்வது மட்டுமில்லாமல், அந்தப் பகுதியில் உள்ள பெண்களுக்கு கைவினைப்பொருட்கள் மூலம் வருமானத்துக்கு கதவுகளை திறந்துள்ளார்.

‘‘நான் வேளாண்மை பட்டதாரி. ஒரு முறை கல்லூரியில் படிக்கும் போது புதுச்சேரி ஆரோவில்லிற்கு கல்லூரியில் இருந்து அழைத்து சென்றார்கள். அங்கு இயற்கை விவசாயத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அதனை பார்த்த போதுதான் இயற்கை விவசாயம் குறித்து எனக்கு தெரிய வந்தது. அன்று முதல் என் மனதில் இயற்கை விவசாயத்தை முன்னேற்றம் செய்யக்கூடிய வழிமுறைகளை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. சொல்லப்போனால், அந்த நிகழ்ச்சிதான், பின்னாளில் இயற்கை விவசாய முன்னேற்றத்திற்காக நான் நிறுவனம் ஆரம்பிக்க ஒரு விதையாக மாறியது என்றால் மிகையாகாது.

படிப்பு முடித்தவுடன், SIMA பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு பருத்தி விதை உற்பத்தி குறித்து துணை ஆராய்ச்சியாளராக கோவையில் ஒரு வருடம் பணி புரிந்து வந்தேன். அப்போது பருத்தி வளர்ச்சியில் நிறைய பூச்சி மருந்து உபயோகம் செய்து வந்தார்கள். இதற்கான மாற்று வழி ஏதாவது இருக்குமான்னு என்னை யோசிக்க வைத்தது. அந்த சமயத்தில் பிரபல தினசரி நாளிதழில் இந்திய பாரம்பரிய அறிவியல் மையத்தில் ஆராய்ச்சி பணிக்கான வேலை இருப்பது குறித்த விளம்பரம் பார்த்தேன். அதற்கு விண்ணப்பித்தேன். ஆனால் அவர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு வைத்துதான் தேர்ச்சி செய்வார்கள் என்பதால் தேர்வு எழுதி, தேர்ச்சியும் பெற்றேன்.

தற்போது அந்த பணியில் இணைந்து 25 ஆண்டு காலமாகிறது. இப்போது அங்கு திட்ட இயக்குனராக இருக்கிறேன். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களை ஒருங்கிணைத்து ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொண்டு வருகிறேன். எங்களின் மையத்தின் முக்கிய பங்கே இயற்கை விவசாயம், பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்தல், மகளிர் வாழ்வாதாரம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். நான் அங்கு அந்த வேலையில் ஈடுபட்ட போது செங்கல்பட்டில் நான்கு ஆண்டுகள் பணி புரிய நேர்ந்தது.

அந்த சமயத்தில் தான் செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலையில் இயற்கை விவசாயம் குறித்த பணிகள் தொடங்கப்பட்டு, பாரம்பரிய நெல் விதைகள் பாதுகாப்பு குறித்த திட்டம் துவங்கப்பட்டு இருந்தது. நான் அந்த திட்டத்தில் இணைந்து செயல்பட்டு வந்தேன்’’ என்றவர் தன் ெசாந்த ஊரான சீர்காழியில் எவ்வாறு இயற்கை விவசாயத்தை அமைத்தார் என்பது குறித்து விவரித்தார்.

‘‘2001ல் எனக்கு சீர்காழியில் செயல்பட வாய்ப்பு வந்தது. என் கணவர் வேளாண்மையில் பொறியியல் படித்தவர். அவருக்கும் சீர்காழியில் அரசாங்க வேலை கிடைத்ததால், நானும் என் சொந்த ஊரான சீர்காழியிலேயே என் பணியினை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். நான் இங்கு பணியில் சேர்ந்த போது, இங்குள்ள விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது. அதனால் அவர்களுக்கு முதலில் இயற்கை விவசாயம் குறித்த புரிதலை ஏற்படுத்தினேன்.

இதன் மூலம் அவர்களின் வயல்களில் இயற்கை விவசாயம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு விவசாயம் குறித்து தேவையான மாற்று வழிகள் ஏற்படுத்தி தந்தேன். இதன் மூலம் அங்கு இயற்கை விவசாயத்திற்கான பணிகளை தொடங்கினேன். ஆனால் அப்போது இயற்கை உரங்களை சந்தைப்படுத்த முடியவில்லை. அதனை சந்தைப்படுத்த சீர்காழி விவசாய சங்கம் என்ற பெயரில் கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

இயற்கை விவசாயம் மூலம் விளைந்த பயிர்களின் விதைகளை வாங்கி, அதனை சேமித்து விற்பனை செய்தனர். மேலும் நபார்ட் (NABARD) மூலமும் கடன் கொடுத்தார்கள். சங்கம் சந்தைப்படுத்துதல் செய்து வந்த நிலையில் விரிவுபடுத்தும் எண்ணத்தோடு இந்திய பாரம்பரிய அறிவியல் மையத்தின் உதவியோடு 2013ம் ஆண்டு வளநாடு தற்சார்பு வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கினோம். இதன் மூலமும் விற்பனை பணிகளை செய்ய தொடங்கினோம். சங்கத்தின் உறுப்பினர்களுடன் இணைந்து வாய்க்கால் தூர் வாருதல், மரம் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு என வளர்ச்சி பணிகளை மயிலாடுதுறை, நாகையை ஒருங்கிணைத்து இரண்டு அமைப்புகள் மூலமாக செயல்படுத்த தொடங்கினோம்.

ஆரம்பத்தில் வளநாடு உற்பத்தியாளர் நிறுவனம் துவங்கிய முதல் மூன்று வருடம் இந்திய பாரம்பரிய அறிவியல் மையம் அவர்களின் செயல்பாட்டிற்கு உதவியது. அதன் பின் 2016ல் இருந்து நாங்க தனிச்சு செயல்பட ஆரம்பித்தோம். எங்க நிறுவனத்தில் பாரம்பரிய விதைகளை உற்பத்தி செய்கிறோம். பாரம்பரிய நெல் கொள்முதல் செய்து அரிசியாக மாற்றி விற்பனை செய்ய ஆரம்பித்தோம். அதனைத் தொடர்ந்து பால் கொள்முதல் செய்கிறோம்.

இதில் மகளிர் பங்குதாரர்கள் மட்டும் 1500 பேர் உள்ளனர். இவர்களிடம் கறவை மாட்டு பால் கொள்முதல் செய்து, வீடுகளுக்கு சப்ளை செய்கிறோம். நபார்ட் இதற்கான பயிற்சி அளித்து உதவினர். இந்த சமயத்தில் 2020ல் கொரோனாவால் ஆறு மாத காலம் நிறுவனம் முடங்கியது. அந்த காலகட்டத்தில் அரசாங்கம் கொரோனா சிறப்பு நிதி அளித்தார்கள். அதனைக் கொண்டு மண்புழு, நுண்ணுயிர் தயாரிப்பு மற்றும் நெல் கொள்முதல், மினி ரைஸ் மில் போன்றவற்றை செயல்படுத்த முடிந்தது. மேலும் மற்ற அரசாங்க நிதி திட்டங்கள் மூலம் கிடைத்த நிதியினைக் கொண்டு இயற்கை விவசாயத்தில் பலவிதமான செயல் திட்டங்களை நிறைவேற்ற உதவியாக இருந்தது’’ என்றவர் அரசாங்கத்தில் பசுமை விருதினை பெற்றுள்ளார்.

‘‘சீர்காழி, கடலோரப் பகுதி என்பதால், அங்குள்ள மண்ணில் உப்புத்தன்மை அதிகமாக இருக்கும். இதற்கான தடுப்பு வழிகள் மேற்கொள்ள வேண்டும். அல்லது உப்புத்தன்மையில் வளரக்கூடிய நெல் விதைகளை பயிரிடவேண்டும். நம் பாரம்பரிய நெல் ரகங்கள் இவை தாங்கி வளரும் தன்மை கொண்டவை. உதாரணமாக, மாப்பிள்ளை சம்பா வளர தனியாக மருந்து அவசியமில்லை. அதன் விதைகளிலேயே எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது.

அதனை கவனத்தில் கொண்டு விதை வங்கி தொடங்கி இருக்கிறோம். மேலும் நிலத்தின் உப்புத்தன்மையை போக்க அரசு மானியத்துடன் பண்ணைக் குட்டைகள் மூலம் மழை நீரை பூமியில் செலுத்தும்படி அமைத்துள்ளோம். வயல்களின் நுழைவுப் பகுதியில் சின்ன குழி வெட்டி தழைகளை போட்டு நீர் வடிந்து வரச்செய்யும் பணிகளுக்கு பயிற்சி அளிக்கிறோம். என் மகளும் வேளாண் பட்டதாரி என்பதால் நாங்க குடும்பமாக எங்களின் நிறுவனத்தை செயல்படுத்த முடிகிறது.

எங்களுடைய மற்றொரு பணி ஈகோ ஃப்ரண்ட்லி கைவினைப் பொருட்களை தயாரிப்பது. இங்கு உள்ள பெண்களுக்கு இதன் மூலம் ஒரு வருமானம் ஏற்படுத்தி இருக்கிறோம். ேமலும் இங்கு பனை மரங்கள் அதிகம் என்பதால் பனை ஓலையில் பலவிதமான கைவினைப் பொருட்கள் மற்றும் சணல் பைகள் எல்லாம் செய்து வருகிறோம். எங்களுடன் இணைந்து துகில் என்ற அமைப்பு இந்தப் பணிகளை ஒருங்கிணைந்து செய்கிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் இந்தியா முழுக்க விற்பனைக்கு செல்கிறது. அனைவரும் சேர்ந்து குழுவாக செயல்பட்டு முன்னேறி வருகிறோம்” என்று மிகவும் உற்சாகமாக கூறினார் சுபாஷினி ஸ்ரீதர்.

தொகுப்பு: சித்ரா சுரேஷ்

The post சீர்காழியில் இயற்கை விவசாயத்திற்கு அடிக்கல் நாட்டியவர்! appeared first on Dinakaran.

Tags : Disorkhazhi ,SAFFRON ,
× RELATED மைதா குலாப் ஜாமுன்